Friday 18 September 2009

இதயம் – உள்ளே இருப்பதை வெளியே தாங்கிய குழந்தை


"இதயம்", வயதுக்கு ஏற்ப வித விதவிதமான எண்ணங்களை நம்முள் வரச் செய்யும் உறுப்பு. காதலர்களுக்குக் கிளர்ச்சியையும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குக் கொழுப்பையும் (Cholestrol) நினைவுப்படுத்தும். துக்கம் நெஞ்சை அடைக்கும் பொழுது, "இதயம் வெடித்து விடும்போல உள்ளதே" என்று புலம்பச் செய்வதும் இதுவே. இப்படி வெறும் இரத்தமும் சதையும் கொண்ட இந்த உறுப்பு நம்மை எப்படி எல்லாம் ஆட்டிப்படைக்கிறது. ஆனால், நெஞ்சுக் கூட்டுக்குள் "பத்திரமாக" இருக்க வேண்டிய இதயம், "உடலுக்கு வெளியே" உள்ளபடி இருந்தால் எப்படி இருக்கும்? ஆமாம், பீகாரில், அரசாங்க மருத்துவமனையில், கூலி வேலை செய்யும் மாஜி-விபா தம்பதிக்கு, ஓர் அழகான ஆண் குழந்தை 26 Aug 09 இல் பிறந்தது. இந்தக் குழந்தைக்கு இதயம் உடலுக்கு வெளியே (நெஞ்சுக்கு மேலே) இருந்தது . தட்டச்சு பிழை எதுவும் இல்லை, நீங்கள் சரியாகத்தான் படித்தீர்கள். இந்தக் குழந்தைக்கு இதயம் உடலுக்கு வெளியே இருந்தது.

diagram_of_the_human_heartஇந்த நிலை மருத்துவத்தில் Ectopia Cordis என்று சொல்லப்படுகிறது. அதாவது, தோலுக்கு வெளியே உறுப்பு உருவாவது என்ற குறைபாட்டுக்களில் ஒன்றுதான் இது. Ectopia Cordis - தோலுக்கு வெளியே உருவாகியிருக்கும் இதயம். இந்தக் குறைபாடு கோடியில் 3 குழந்தைகளுக்குத் தான் ஏற்படும் என்று ஆய்வுகளின்படி தெரியவந்துள்ளது. கருவில் இதயம் முழுவதுமாக வளரும் முன்னே நெஞ்சுக்கூடு ஒட்டிக்கொள்வதுதான் மூல காரணம் என்று மருத்துவப் புத்தகங்கள் சொல்கின்றன. இப்படி ஆவதால், இதயம் மட்டுமல்ல, சில பிள்ளைகளுக்கு நுரையீரல் போன்ற உறுப்புகளும் தோலுக்கு வெளியே வளருவதுண்டாம். முக்கிய உறுப்புகள் இப்படி தோலுக்கு வெளியே வளர்வதால், அவ்வுறுப்புகளுக்குச் சரியான பாதுகாப்புக் கிடைப்பதில்லை. இதனால் மேற்கொண்டு வரும் மருத்துவச் சிக்கல்கள் பல. அதனால் இம்மாதிரி குறைபாடுகள் இருக்கும் சிசு பெரும்பாலும் இறந்தே பிறக்கும் அல்லது, சில மணி நேரங்கள் மட்டுமே தான் உயிருடன் இருக்குமாம்.


-தீபா கோவிந்

No comments:

Post a Comment